KUMARI KANDAM

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

குமரி கண்டம்

குமரி கண்டம் (தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் இந்தியா) இம்மூன்று இடங்களையும் இணைக்கும் இணைப்பு தான் குமரிகண்டம்.

குமரி கண்டம் 14 மிகப்பெரிய சிகரங்களை உள்ளடக்கியது. இதில் கைலாயமும் அடங்கும்.

சுர (தேவர்கள்), அசுரர்கள் சேர்ந்து ஒன்றாக பாற்கடலை கடையும் போது, உருவான பிரளயத்தால் எல்லா மலைச்சிகரங்களும் நீரில் மூழ்கின. உண்மையில் இமயமலை, இலங்கையின் கீழ் இருந்ததாகவும், ஆனால் இந்த பாற்கடலை கடையும் போது மெதுவாக நகர்ந்து தற்போது இருக்கும் சீனாவின் அருகில் நின்றது.

மஹாவிஷ்ணு கூர்மமாக மாறி கைலாய மலையை நீரில் மூழ்காமல் காத்து நின்றார்.

இதன் பிறகு மனுவானவர் மற்ற உயிர்களை காக்க, மீண்டும் மனித குலம் தழைக்க.. 64 லட்சம் ஜீவராசிகளை ஒன்றிணைக்கிறார். இதில் யோனிஜம் (கருப்பையில் இருந்து உருவாகும் உயிர்கள்), அண்டஜம் (முட்டையில் இருந்து உருவாகும் உயிர்கள்) ஜலஜம் (நீரில் இருந்து உருவாகும் உயிர்கள், ப்ரித்விஜம் (மண்ணில் இருந்து உருவாகும் உயிர்கள்) என்று 64 லட்சம் உயிர்களை காப்பதற்க்கான படகை உருவாக்குகிறார்.

இந்த பாற்கடலை கடையும் நிகழ்விற்கு இந்திரன், அக்னி, எமன், வருணன், குபேரன், ஈசானன்,பிரம்மன், மஹா விஷ்ணு, என 10 திசைகளுக்கும் 10 காவலர்களை நியமித்து கடைகிறார்கள். இதில் பிரம்மன் கீழுள்ள பாதாளங்களையும், விஷ்ணு மேலுள்ள ஆகாயங்களும் காக்கும் பொறுப்பில் இருக்கிறார்கள். இதில் பிரம்ம தவறும் பொழுது மஹா விஷ்ணு ஆமையாக மாறி மலைகள் மூழ்கிவிடாது காத்து நிற்கிறார்.

இந்த பிரளய காலத்திற்கு பிறகு மஹாவிஷ்ணு மீனாக மாறி உயிர்கள் உள்ள கப்பலை இழுத்து வந்து தற்போதுள்ள பாண்டிய நாட்டில் நிறுத்துகிறார். (தற்போதுள்ள மதுரையில் - பண்டாய நாடு தான் மருவி பாண்டிய நாடாகியது) இந்த காரணத்தாலே பாண்டியர்களின் சின்னம் மீனாகவும், அன்னை மீனாட்சி அரசாட்சி பொறுப்பை ஏற்கும் பொழுது மனுதர்மத்தின் படியும் ஏற்கிறார்கள். அதோடு தேவி மீனாட்சியின் பெயர்காரணமும் இதுவே, மனுவின் ஆட்சியை நிலைநிறுத்தவும் அகத்திய மகா முனி தேவி தடாதகைக்கு பட்டாபிஷேக பெயராக மீனாட்சி என்று பெயர்சூட்டுகிறார்.


கடல்கோளுக்கு முன்பு இப்போதுள்ள மேற்குத் தொடர்ச்சிமலை வடமலை என்று புராணங்களிலும் இலக்கியங்களிலும் அழைக்கப்பட்டிருக்கிறது. அந்த வடமலையில் தான் மனுவின் பேழை இருந்ததென சதபத பிராமணம் என்ற வடமொழிநூல் கூறுகிறது. வடமலை எனக் குறிப்பிடப்படும் குற்றால பொதிகை மலையில் தான் மனு தவம் செய்தான். அப்போது வைகை ஆற்றில் இருந்து ஒரு தெய்வீகமீன் வடிவம் தோன்றியதாகவும் மச்சபுராணம் கூறுகிறது. வைகை ஆற்றின் கரையில் தான் மனு தவம் செய்தான் என அக்கினிபுராணம் கூறுகிறது. மனுவானவன் பாலாற்றின் கரையில் தவம் செய்தான் என்று மகாபாரதத்தின் வனபர்வம் கூறுகிறது.

“மனு தமிழ் உலகத்தில் தோன்றியவராதலாலும், சூரிய குமாரனனான அம் மனு மலையாள மலையில் தவஞ்செய்தமையாலும், சத்திய விரதன் என்னும் அவர் கிருத மாலை என்னும் வையை ஆற்றில் பலியிட்டமையாலும், பாண்டிய அரசரின் இலட்சினையாக்கப்பட்ட தெய்வீக மீன், பாண்டியரின் தலைநகராக வந்த மதுரையிலே தமிழ் சாதியனரின் முன்னோராகிய மனுவின் முன் தோன்றினமையாலும், மனுவும் அவர் வழி வந்தோரும் தமிழரேயாவர்.”

இப்படி ஏறக்குறைய 500 தொன்மங்கள், பாரம்பரியக் கதைகள் உலகெங்கும் உள்ள தொல் நாகரிக நினைவுகூறல்கள் உள்ளதாக புவிபரிணாமவியலாளர் ராபர்ட் சூக் (Robert Schoch) கூறுகிறார். காண்க:

ஸ்ரீமத் பாகவதப் பகுதியை ஆராய்வோம்.

”யோசௌ ஸத்யவ்ரதோ நாம ராஜரிஷி திராவிட ஈஸ்வர ஞானம்யோதீத கல்பாந்தே, லேபே புருஷ சேவயா ஸவை விவஸ்வத புத்ரோ, மனுர் ஆஸீத் இதி ஸ்ருதம் த்வதஸ் தஸ்ய சுதாப்ரோக்தா இக்ஷ்வாகு ப்ரமுகா.” (9-1.2&3)


இதன் பொருள் :- ”ராஜ ரிஷியான ஸத்யவ்ரதன் என்றழைக்கப்பட்ட திராவிட தேசத்து அரசன், பரம புருஷனுக்குச் செய்த தொண்டின் காரணமாக, முந்தின கல்பத்தின் முடிவில் ஞானம் பெற்றான். உண்மையில் அவன் விவஸ்வானின் மகனான மனு. அவனுடைய மகனான இக்ஷ்வாகுவின் வழியில் வந்த மன்னர்கள்... “


விவஸ்வானின் மகனானதால் இந்த மனுவுக்கு, வைவஸ்வத மனு என்ற பெயர் வந்தது.

இந்த ஸ்லோகத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளும் விவரங்கள் :- மனித குல உற்பத்திக்கு இந்த மனு காரணமாவான் என்று சொன்னாலும், அவனுக்கு முன்னும் மனித குலம் இருந்திருக்கிறது. இந்த மனுவுக்கு முந்தின காலக் கட்டத்தில் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அந்தக் காலக் கட்டத்தின் முடிவு நேரிட்ட போது, அவர்களுள் தீரனாகவும், அரசனாகவும் இருந்தவன் வைவஸ்வதன். அவன் ஆண்ட நாடு திராவிட நாடு. இந்தத் திராவிட நாட்டைக் கடல் கொண்டு விடவே, அவன் நாவாய் மூலமாக, மத்ஸ்யத்தின் துணை கொண்டு (மத்ஸ்யவதார அருளால்) ஸரஸ்வதி நதி தீரத்தை அடைந்திருக்கிறான். இவன் ஆண்ட திராவிட நாடு இன்று இல்லை!! அவன் வெள்ளத்திலிருந்து தப்பிய பிறகும் இல்லை. இதை நிச்சயமாகச் சொல்லலாம். ஏனென்றால், அவன் ஆண்ட அந்த நாடு கடலுக்குள் அமிழாமல் தப்பியிருந்தால், மீண்டும் அங்கு சென்று தன் ஆட்சியை நிலை நாட்டியிருப்பான் அல்லவா? அவன் ஆண்ட அந்த நாடு இருந்திருந்தது என்றால், 10 மகன்களோடு ஸரஸ்வதி நதி தீரத்தை ஆண்டு வந்தானே, அவர்களுள் ஒருவனாவது, அல்லது அவர்களது சந்ததியில் வந்தவர்களாவது, அதை மீட்டிருப்பார்கள் அல்லவா? எனவே திராவிடம் என்று சொல்லப்பட்ட நாடு 14,000 ஆண்டுகளுக்கு முன்பே, முதல் ஊழிக் காலத்தில் கடலுக்குள் முழுகி விட்டது. 14,000 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் இல்லை, சேரர்கள் இல்லை. ஆனால் பாண்டியர்கள் மட்டும் எங்கோ தென் புலத்தில், பூமத்திய ரேகைக்குத் தெற்கில் இருந்தனர். அந்தப் பிரதேசத்தை மீனாட்சி அம்மையை முன்னிட்டு 11,000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி அவர்கள் ’கௌரியர்’ என்ற சிறப்புப் பெயரில் ஆண்டிருக்கின்றனர். அதற்கும் முன் பாண்டிய குலமும், தமிழ் பேசும் மக்களும் அங்கு இருந்திருக்க வேண்டும். ஆனால் வைவஸ்வத மனு ஆண்ட திராவிட நாடு அங்கு இருக்கவில்லை. அதாவது திராவிட நாடும், தமிழர்கள் வாழ்ந்த நாடும் ஒன்றல்ல என்று தெரிகிறது. அந்தத் திராவிட நாடு அரபிக் கடலில் இருந்திருந்தால்தான், வெள்ளத்தின் பொழுது ஸரஸ்வதி நதி வழியாக இமய மலை வரை மனுவும், அவனைச் சேர்ந்தவர்களும் சென்றிருக்க முடியும். அந்த மனு தொடங்கி, மக்கள் பெருக்கம் ஆரம்பித்திருக்க வேண்டும். அவர்கள் தற்போதைய இந்தியா முழுவதும் பரவி இருக்கிறார்கள். மனுவின் மகனான இக்ஷ்வாகுவின் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள் என்று முன்பே பார்த்தோம். இப்படிப் பரவியதன் மூலம், 7-ஆவது மனுவின் ஆதிக்கம், அதாவது வைவஸ்வத மன்வந்திரம் உண்டானது என்று சொல்லப்படுகிறது.

14,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த திராவிட நாட்டைக் கடல் கொண்டு விட்டது என்பதே மனுவின் சரித்திரம் சொல்லும் செய்தி.

Referances

https://drive.google.com/file/d/1XrI0FhmIlES2gU4kVKP7YhartQmgyEd-/view?usp=sharing

Images

1XrI0FhmIlES2gU4kVKP7YhartQmgyEd- 1vm7cLPgZIV3IYSXuxO96o0NKRmWJOK0i 150j-MMLvuNlqays6EkrhiZCN1TTWMID8 1lkBbE3_9LmfDyiCXUioYepn00UEozLUR 1lkBbE3_9LmfDyiCXUioYepn00UEozLUR 1sC6hPMMTWBCPLJK7cMl1wKBPkICtQAjM 1N1gVi-BJsfIhlAKKcJnwi6tBYxr8YkNi